Tuesday, 21 August 2018
சமீபத்தில் முடிவுற்ற தமிழ் மாநில மாநாட்டிற்குப் பின் மாநில முதல்செயலக கூட்டம் 20-08-2018 அன்று மாலை 5-00 மணிக்கு மாநிலத்தலைவர் தோழர் V .ராமராவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய சங்க துணைத்தலைவர் தோழர் DG , முன்னாள் தமிழ்மாநில செயலர் தோழர் K . முத்தியாலு , முன்னாள் மாநில பொருளாளர் தோழர் கவுஸ் பாட்சா , முன்னாள் மாநில துணைத்தலைவர் தோழர் A .சுகுமாரன், மற்றும் சென்னையில் உள்ள சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர் .
முதலாவதாக பாரத முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் , தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் திரு சோம்நாத் சாட்டர்ஜி , ஐநா சபையின் முன்னாள் பொதுச்செயலர் திரு கோபி அன்னான் ஆகியோர் மறைவிற்கும் , அண்மையில் கேரளா, மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஏற்பட்ட பெருமழை , வெள்ளத்தால் பலியானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில மாநாடு பற்றிய ஆய்வில் அனைவரும் பங்கேற்று மாநாடு மிகச்சிறப்பாக எந்தவித குறையுமின்றி நடந்தேறியதை மிகவும் பாராட்டினார்கள். குறிப்பாக உணவு மிகவும் சுவையாகவும், மிகுந்த உபசரிப்புடனும் பரிமாறியதை சிறப்பாக பாராட்டினார்கள். வரவேற்புக்குழு தலைவர் டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி அவர்களின் உரையும் , " இதயத்தை பாதுகாப்பது எப்படி " எனும் அவரது செயல்முறை விளக்கமும் மிகவும் பயனுள்ளதாகவும், மாநாட்டை நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக இருந்தது என்று அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.
மாநாடு நிகழ்ச்சி நிரலில் திருப்திகரமாக விவாதிக்கப்பட்டு எல்லா முடிவுகளும் நிறைவாக எடுக்கப்பட்ட போதிலும், மாவட்ட செயலர்கள், மற்றும் சார்பாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள நேரமின்மை காரணத்தினால் , வருகிற பூரி அனைத்திந்திய மாநாட்டிற்குப்பிறகு ஒரு விரிவான மாநில செயற்குழு நடத்தப்பட வேண்டுமென்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.
அனைத்திந்திய மாநாட்டிற்கு செல்ல இருக்கின்ற சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை 24-08-2018 க்குள் இறுதி செய்து பூரி யில் இயங்கிவரும் அனைத்திந்திய மாநாட்டு வரவேற்பு குழுவிற்கு தெரிவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட செயலர்களுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்ய மாநில துணைத்தலைவர் தோழர் விக்டர்ராஜூ அவர்கள் எல்லோரிடமும் பேசி இறுதி செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. தோழர் விக்டர்ராஜூ அவர்களது கைப்பேசி எண் 88382 00729 உடன் மாவட்ட செயலர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டுகிறோம். இதுவரை மாநில சங்கத்திற்கு கிடைத்துள்ள தகவலின்படி சுமார் 250 தோழர்கள்/தோழியர்கள் அனைத்திந்திய மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்ற தகவல் தரப்பட்டுள்ளது.
கேரளா வெள்ள நிவாரண நிதியாக நமது மாநில சங்கம் அளித்துள்ள ரூ 10,000/- நிதியுடன் கூடுதலாக ரூ 15000/- அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் முன்னாள் மாநில தோழியர் சிவகாம சுந்தரி அவர்கள் , மேலும் சேலம் மேற்கு மாவட்ட சங்கம் தலா ஒரு லட்சம் , நெல்லை மாவட்டம் அனுப்பியுள்ள ரூ 15000/- ,தோழர் ராமராவ், தோழர் DG , தோழர் K .முத்தியாலு , தோழர் A .சுகுமாரன் ஆகியோர் தலா ரூ 1000/- அனுப்பியுள்ள தகவலும் , மாநிலம் தழுவிய அளவில் இதுவரை அனுப்பியுள்ள விபரங்களும் தெரிவிக்கப்பட்டது. இன்னும் நிவாரண நிதி அனுப்ப திட்டமிட்டுள்ள தோழர்கள் /தோழியர்கள் கேரளா மாநில சங்க வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வருமான வரி விலக்கு தேவைப்படுவோர் தாங்கள் அனுப்ப உள்ள நிவாரண தொகையினை நேரடியாகவே கேரள மாநில முதலமைச்சர் துயர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கலாம்.
மாநில சங்க பொறுப்புகள் தோழர் K .முத்தியாலு மற்றும் தோழர் கவுஸ் பாட்சா அவர்களால் புதிய மாநில செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது .
இறுதியாக மாநில துணைசசெயலர் தோழர் S .சுந்தரகிருஷ்ணன் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.