மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?
மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். வீட்டிற்குள்ளே
இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும். மார்ச் 8-ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8-ம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.
சர்வதேச
மகளிர் தினம் என்று
ஒருநாள் வருவதற்குக் காரணமே
இந்த உழைக்கும் பெண்
வர்க்கம் தான் என்பது
தங்கமுலாம் பூசப்படாத உண்மை!
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.
புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!
தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.
18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும், சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது. இந்த நிலையில்தான் 1857-ம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும், படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது. இதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது.
எது எப்படி இருந்தாலும், வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததேத் தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. (அது இன்று வரை பல இடங்களில் தொடருவது மற்றொரு பிரச்சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை.
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857-ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தான் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உரிமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் அடக்கினர். வெற்றி பெற்றதாக பகல் கனவும் கண்டனர். ஆனால் அந்த பகல் கனவு நீண்ட நாட்களுக்கு பலிக்கவில்லை. அடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத் தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907-ம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உriமை, சம ஊதியம் கோரினர்.
இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். அந்த தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பெண்களை அடக்கி ஆள நினைத்த ஆண் சமுதாயம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா அல்லது இந்த தீர்மானம் நிறைவேற வழி ஏற்படுத்துமா... பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது. இதற்கிடையே பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர்.
1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.
அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 94 ஆண்டுகளுக்கு முன்பு 1921-ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
Clara Zetkin (5 July 1857 - 20 June
1933) Alexandra Kollontai
(19 March 1872 – 9 March 1952)
Alexandra Kollontai Memorial - Moscow
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இந்த தினம் தங்களது குடும்பம், சமுதாயம், சமூகம், நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ள சாதாரண பெண்களின் முனைப்பை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாலின சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உலகை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும். மேலும், அனைத்து வகையிலும் பெண்களின் முன்னேற்றம் என்ற இலக்கை அடைவதில் நாம் கண்டுள்ள வெற்றிகளைக் கொண்டாட வேண்டிய தினமும் ஆகும் இது. அதே சமயம் பெண்கள் தொடர்பான அனைத்து வகை முன்னேற்றங்களிலும் குறிக்கோள்களை அடைந்ததை நினைவுபடுத்தவும், மாற்றத்துக்கு வழிகோலும் திட்டங்களை செயல்படுத்தவும் இந்த நாட்டின் விதியை சீரமைக்க ஓய்வில்லாமல் பாடுபடுங்கள்.
(Script By Prof.S.Selladurai, Addl. Registrar, Anna
University & Pictures by Prof.A.Rajadurai, Dean,MIT)
Source: Wikipedia, the free encyclopedia
GMail லில் நண்பர் த,முருகேசனின் பகிர்வு-- நன்றி.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.